Wednesday, December 3, 2014

விஞ்ஞானி -


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

ஒரு விஞ்ஞானி விவசாயம் பற்றி அதுவும் மரபுசார் விவசாயம் பற்றி அக்கரை கொள்கிறார் என்பது அரிதிலும் அரிது. மரபுசார் ஆராய்ச்சியாளர்களே விதைகளை களவாடி அயல் நாடுகளில் விற்று பிழைகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நேர்மையான விவசாய விஞ்ஞானிகளுக்கு நேரும் அனுபவத்தை அதன் உள்ளரசியலை தமிழில் ஒரு திரைப்படமாக ’பார்த்தி’ என்ற (விஞ்ஞானி) இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். அதற்காக தமிழக மக்களின் சார்பக ஒரு தமிழ் மகன் என்ற தகுதியுடன் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

இந்த கதையாடலுக்குப் பிண்ணனியில் தொல்காப்பியம் முக்கியத்துவம் வாய்ந்தாக பேசப்படுகிறது. அதுவும் 3000 ஆண்டுகளுக்கு முன் என்ற முன்னுரையுடன். தொல்காப்பியரே தனது கைப்பட எழுதியதாக காட்டியிருக்கின்றனர். நமது விஞ்ஞானத்தின் ஆண்டு அதுதானா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் இந்த மட்டுமாவது நமக்கான பெருமையை ஏற்றுக் கொண்டோமா என்றால் இல்லை.

3000 ஆண்டுகளுக்கு முன்னே நமது முன்னோர்கள் கண்ட விவசாய விஞ்ஞானம் ஏன் வளர்ச்சியை நோக்கி அடுத்த கட்டத்தை எட்டவில்லை? இந்தக் கேள்வியை கேட்கவிடாமல் செய்ததின் சூழ்ச்சியில் ”வளர்ச்சி” என்ற வார்த்தையும் ”விஞ்ஞானம்” என்ற வார்த்தையும் முன் நிற்கிறது. இவ்வார்த்தைகளை முன்வைக்கும் முன் பாரம்பரியம் என்பதை ”பழமை” “பயனற்றவை” என்ற பதங்களால் “பதம்” பார்க்கப்பட்டிருக்கிறது. இதை நாம் இன்று வரை உணர்ந்தோரில்லை. ஆனால் விஞ்ஞானம் வளர்ச்சி என்ற போலி வார்த்தையும் பசப்பும் நம்மை ஆழ்குழியில் தள்ளியிருக்கிறது. நாம் அதில் விழுந்து கிடக்கிறோம் என்ற நிலையைக்கூட உணர முடியவில்லை. உணர்த்த வரும் ஒரு சிலரைக்கூட உலகம் இது தான் என நம்பவைக்க முயல்கின்றனர். நமது வரலாறு நமது எதிரிகளாளும் நம்மைப்போன்றே உள்ள நமது துரோகிளாலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றைத்தான் நாம் இன்று வரை படித்து வருகிறோம். ஆனால் பார்த்தி அவர்கள் தமது திரைப் படத்தின் மூலம் நமது வரலாற்றுப் பெட்டகத்திற்குக் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

நம்மிடம் இருந்த அறிவையும் அதிகாரத்தையும் களவாடிய ”கள்ளக்கூட்டம்” நம்மையும் நமது இலக்கியத்தையும் ஆட்சி செய்கிறது, ஆதிக்கம் செலுத்துகிறது. அவற்றை பார்த்தி போன்றவர்களால் எதிர் கொள்ளப்படுகிறது. அவரின் சொந்த அனுபவமாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. படித்த இவரைப் போன்றோர்களுக்கு பல்வேறு தளங்களில் இருந்து பல அழுத்தங்கள் வரும் ஆனால் அவற்றை நமக்கேன் வம்பு என்ற மனநிலையில் எதிர்த்துப் போராடமல் விட்டுவிடுகின்றனர். காரணம் கற்ற கல்வி அவற்றைத்தான் போதிக்கிறது. போராட்ட குணத்தை முற்றிலும் அழித்து ஒழிக்கிறது. இது திட்டமிட்ட உளவியல் போர். இந்தப் போரை தனியொருவராக பார்த்தி சந்திக்கிறார் அதன் நியாய நிலைப்பாட்டை பொதுவெளிக்கு கொண்டும் வந்திருக்கிறார். அதன் வெளிப்பாடே இந்த திரைப்படம். இப்படித்தான் நாம் அவரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

3000 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்களின் தீர்க்கதரிசனம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மாதம் ”மும்மாரி” பொழிந்த காலத்தே ”தாகம் தீர்த்தான்” நெல்லின் அவசியம் தெரிந்திருகிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீர்க்கானது என்று ஒரு சில விஞ்ஞானிகள் இப்பொழுது சொல்ல ஆரம்பித்திருகின்றனர். இந்த நிலையில் திரு. பார்த்தி அவர்கள் ”தாகம்தீர்த்தான்” நெல்லின் அருமைகளையும் அதை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் அளித்திருக்கிறார். இந்த நம்பிக்கை என் போன்ற விவசாயத்தை உயிர் மூச்சாய் எண்ணுவோரிடத்தில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. இராமநாதபுரம், சிவகங்கை போன்ற வரண்ட நிலத்தில் விவசாயம் செய்து வலிகளை சந்தித்தவர்களுக்குத் தான் புரியும் தண்ணீரின் அருமை.

ஒரு திரைக்கலைஞனாக பார்த்தியை ஏற்க முடியவில்லை ஆனால் ஒரு சமூக அக்கரை கொண்ட விஞ்ஞானியாக எமது நெஞ்சில் உயர்ந்து நிற்கிறார். கதையை இன்னும் கொஞ்சம் வீரியத்துடன் சொல்லியிருக்கலாம். அவருக்கு தணிக்கைத்துறை பற்றிய பயம் காட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொள்ளவும் வைக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டிய படம். அதன் அரசியலை உணர வேண்டிய தருனம். எனவே எல்லோரும் திரையரங்கு சென்று பார்ப்போம். மறக்காமல் திரு. பார்த்தி அவர்களுக்கு மானசீகமாக ”கை” குழுக்குவோம்.

இங்ஙனம்,

வே. பரிதிவேந்தன்.

No comments:

Post a Comment