தமிழ் வழக்கப்படி நில உலகத்தைச் சூழ்ந்துள்ள வானத்தை 12 வீடுகளாகப் பகுத்து ஒவ்வொரு வீட்டிலும்
இரண்டேகால் விண்மீன் கூட்டங்களை (நட்சத்திரங்ளை) அடையாளமாகக் கொள்கின்றோம். ஆக 2.25 x 12 = 27 அடையாள விண்மீன் கூட்டங்கள் 360 பாகையில் இருக்கின்றன.
ஒவ்வொரு விண்மீன் கூட்டத்தையும் நான்கு பகுதிகளாகப் (பாதம் ) பகுத்தால் 27 x 4 = 108 பாதங்கள்.
எனவே மந்திரங்கள் 108 என்னும் அடிப்படையில் அமைகின்றன.
சமற்கிருத, ஆரிய முறைப்படி முன்னர் 28 நட்சத்திரங்கள் இருந்தன. பின்னர் அவர்கள் தமிழ் முறைக்கு மாறினர் (இதற்குச் சான்று பின்னர் தர வேண்டும்).
இக்குறிப்பில் இந்த விண்மீன் கூட்டங்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் என்ன என்பதை அறியத் தருகிறேன். ஒருசில சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாக இல்லாமல் இருக்கலாம். சில பெயர்கள் வெவ்வேறு கூட்டத்துக்கும் பயன்பட்டிருக்கின்றன. இவற்றை
அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றேன். ஒவ்வொரு விண்மீன் கூட்டத்தின் பெயரும் ஒரு சில கருத்துகளின்
அடிப்படையில் அமைந்துள்ளது.
1. அசுவினி = ஆதிமீன், பரிமுகம், முதனாள்,
2. பரணி = அடுப்பு, முக்கூட்டு, பாகு, தாழி, கிழவன், காடுகிழவோள், நடுவனாள், பூதம், வேழம், யாமை, தராசு
3. கார்த்திகை = அறுமீன், அறுவாய், அங்கிநாள், அழற்குட்டம், தழல், எரி, அளகு, அளக்கர், ஆல், ஆறாமீன், இறால், நாவிதன்
4. உரோகிணி = உருள், தேர், ஊற்றால், ஐம்மீன், சகடு, சாகாடு, பண்டி, பேராளன்
5. மிருகசீரிடம் = திங்கள்நாள், இந்து, இந்திரன், ஐந்தானம், ஐந்தவம், நரிப்புறம், மாழ்கு
6. திருவாதிரை = செங்கை, செம்மீன், துணங்கை, யாழ்
7. புனர்பூசம் = அதிதிநாள், ஆவணம், எரி, கரும்பு, கழை, பாலை, பிண்டி, புணர்தம், வேய்
8. பூசம் = குடம், கொடிறு, தை, புசியம், புணர்மீன், வண்டு
9. ஆயிலியம் = அரவு, அரவம், அரவினாள், ஆயில்,
கட்செவி, கவ்வை, கவை, பாம்பு
10. மகம் = முற்சனி, ஆதிச்சனி, ஆதியெழுஞ்சனி, எழுவாய்யெழுஞ்சனி, கொடுநுகம், ஞெமலி, மாகம், மாசி, வாய்க்கால், வேள்வி, வேட்டுவன்
11. பூரம் = எலி
12. உத்தரம் = பிற்சனி, கதிர்நாள்,மாரிநாள்
13. அத்தம் (ஹஸ்தம்) = அங்கிநாள், கனலிநாள், அத்தநாள், ஐம்மீன், ஐவிரல், கைம்மீன், கைனி, களிறு.
14. சித்திரை = அம்பரம், அறுவை, ஆடை, சுவை, செவ்வி, துவட்டாநாள், நடுநாள், தூசு, நெய், நேர்வான், பயறு,
15. சுவாதி = அனிலநாள், சோதி
16. விசாகம் = சேட்டை, முற்றில், வியாகம்.
17. அனுடம் = தாலம், பனை, புள், தாளி, தேள், அனிழம்
18. கேட்டை = அழல், எரி, செந்தழல், தழல், ஒளி, துளங்கொளி, இந்திரன்
19. மூலம் = ஆனி, கொக்கு, சிலை, தேள்கடை
20. பூராடம் = உடைகுளம், முறிகுளம், நீர், நீர்நாள், புனல், மாரி, முற்குளம்.
21. உத்திராடம் = பிற்குளம்
22. திருவோணம் = அரி, மாயோனாள், உலக்கை, ஓணம், சோணை, நள், வயிரம்
23. அவிட்டம் = காக்கை, கொடி, தனிட்டை, விட்டம்\
24. சதயம் = குன்று, சுண்டன், செக்கு, சுண்ணம், வாருணி
25 பூரட்டாதி = இசைநாள், நாழி, நீர், பதம், முற்கொழுங்கால்
26. உத்திரட்டாதி = நாழிகை, மன்னன், முரசு, அறிவன், பிற்கொழுங்கால்
27. இரேவதி = கலம், தோணி, பஃறி, குலம், தொழு, சூலம்
சான்று நூல் பட்டியல்
1. தமிழ்க் கழக அகராதி - திருநெல்வேலி சைவ சித்தசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.
2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சென்னைப் பேரகராதி (MUTL).
4. நிகண்டுகள் (பிங்கலம், திவாகரம்)
No comments:
Post a Comment