Friday, December 5, 2014
பழந்தமிழர்களின் சுழியம் ”0” கண்டுபிடிப்பு...
பேராசிரியர் இரா.மதிவாணன் முல்லை.உதயதாசு-சுவிசு. அறிவாலயம்
உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் “பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா” எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் குமரி நாட்டுத் தமிழரின் கொடை என்பதை உலகம் அறியவில்லை. பழந்தமிழர் ஞாலமுதல் சுற்றுக்கடலோடிகள்
அந்நாள் முதல் வானநூலும் உயர்நிலை கணிதமும் ஒன்றுசேர வளர்ந்தன. “நிலக் கோட்டின் இருபாலும் 5 பாகை அளவுக்குள் புயல் உண்டாவதில்லை” உன்பதைப் பட்டறிவால் உணர்ந்தனர்.
ஆபிரிக்கக் கிழக்குக் கடற்கரை கெனியாவுக்கும் கீழ்க்கடலில் இந்தோனேசியா, சாலமன் தீவு, தென்னமெரிக்க பெரு நாட்டின் வடகோடிப் பகுதிகளுக்கும் விண்மீன் துணைக்கொண்டு கி.மு 4000 – 3000 காலத்திலேயே நெடும்பயணம் செய்தோராவர்.
வான நூலும் கணிதமும் வளர்ந்ததன் விளைவாக மேல் இலக்கத்தின் மேல் வரம்பையும் கீழ் இலக்கத்தின் (பின்னத்தின்) கீழ் வரம்பையும் கணிக்க முடியாதஎல்லையினைச் சுழியம் ’0’ எனக்குறித்தனர்.
கழியத்தின் நுட்பம்
ஒருநாளில் 60 நாழிகை முடிந்ததும் அடுத்த நாள் தொடங்குகிறது. அந்த நேரத்தைச் சுழிய நேரம் ( Zero Hour ) என்கிறார்கள். 9 ஆனதும் 10 ஐக் குறிக்க ஒன்றையடுத்துச் சுழியம் ’0′ இடுகிறோம். இதன் பொருள் என்ன? பத்தாம் இடத்தில் ஒரு பத்து முடிந்து விட்டது. பதினோராம் எண் ஒன்றாம் இட மதிப்பை நிரப்பும் வரையுள்ள இடைவெளி நேரத்தில் ஒன்றுமில்லாத தன்மையினைச் சுழியம் என்னும் வட்டம் உணர்த்திநிற்கிறது.
ஒன்று என்னும் எண்ணை அதிகப்படியாக எத்தனைப் பகுதிகளாகப் பகுக்க முடியும் என்னும் வினாவுக்கு விடை சொல்ல முடியுமானால் எண்ணிக்கைகளில் மிகப்பெரியபேரெண் எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.
இருக்கும் பொருளைத்தான் பகுக்க முடியும். பொருளை பகுத்துக்கொண்டே போனால் ஒன்றுமில்லாத நிலை உருவாக்க முடியுமா? என்பது அடுத்த வினா. ஒன்றுமில்லாத நிலை உருவாக்க முடியாது என்பதே விடை.
ஏதோ ஒரு கடைசி எல்லையில் மிகச் சிறிதாகிய நுண்ணணு மேலும் பகுக்க முடியாத நிலையில் இருந்தே ஆகவேண்டும் என்பதை ” Atom can neither be created nor destroyed ” என அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஒன்றுமில்லாத நிலை உருவாகாது. அப்படியானால் ஒன்றுமில்லாதது என நாம் கருதும் சுழியம் எதைத்தான் குறிக்கிறது? இதற்குத் தொல்காப்பியர் இன்மை எனப்பெயரிட்டார்.
தொல்காப்பியரும் ஐன்சுடீனும்
பொருளின் பகுப்புகளில் ஒன்றுமற்ற நிலை உருவாக்கமுடியாது. ஒரு பொருள் மற்றொரு பொருளாகும் வளர்ச்சிநிலை அல்லது அழிவு நிலைகளின் நுடண்ணிய இடைவெளி நேரத்தைத்தான் ஒன்றுமில்லாத இடைக்கால நிலை என்று சொல்ல முடியும்.
பொருளைப்போலவே காலத்தை எத்தனைக் கூறுகளாகப் பகுத்தாலும் ஒன்றுமற்ற இடைவெளியைக்காண முடியுமா? என்பது அடுத்த வினா.
காலம் ஐம்புலனுக்குப் புலனாகாது. அறிவால் மட்டும் உய்த்துணரமுடியும். பொருளைத் தனியாகப் பிரித்தால் காலம் என்பது ஒன்றுமில்லாததாகிவிடும். அதாவது, பொருளற்ற நிலையைக் காட்டும் இல்லாத நிலையை உணர்த்தாது. ஆதலால் காலமும் உள்ளதாகிய கருத்துப் பொருளே.
தொல்காப்பியர் கருத்துப் பொருளாகிய காலத்தையும் இடப்பரப்பாகிய பருப்பொருளையும் ஒன்று சேர்த்து, “காலமும் இடனும் முதற் பொருளென்ப” என்கிறார்.
பொருளிலிருந்து காலத்தைப் பிரிக்க முடியாது. காலத்திலிருந்தும் இடத்தைப் பிரிக்க முடியாது. இதனை ஐன்சுடீன் பெருமகனார் “பொருளின் நீள, அகல, உயரம் எனும் கன அளவோடு காலத்தையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும்” என்றார். இதுவே தொல்காப்பியர் கருத்துமாகும்.
பொருள் உடம்பு என்றால் காலம் உயிர். பொருளின் இடைவிடாத இடமாற்றங்களின் ஊடே நிலவும் மிகச்சிறிய இடைவெளி நேரம் ஒன்றுமில்லாதது போல் தோன்றுகிறது. அதுவே சுழியமாகக் கொள்ளப்படுகிறது.
காலத்தின் இடைவெளியும் கருந்துளைக் கோட்பாடும்
ஒன்றைப் பகுத்துக்கொண்டே போனால் மேலும் பகுக்க மடியாத ஒரு கட்டத்தில் அந்தப் பகுப்புக்கள் குறிப்பிட்ட சேர்மானங்களில் (விகிதங்களில்) ஒன்றுகூடி மீண்டும் பொருள்களாவதற்குரிய இடைவெளி நேரம் சுழியமாகக்கருதப்படும். மேல்வாய் பேரெண்ணும் கீழ்வாய் இலக்கக் கடைக்கோடி எண்ணும் சமமாகக் கூடும். பேரண்டச்சுழற்சியும் வட்டமாகவே அமையும்.
பேரண்ட அழிவுக் காலத்தில் எல்லா உலகங்களும் கருந்துளைக்குள் ( Black Hole ) சென்று மீண்டும் வெடித்துப்பழையபடி உலகங்களாகின்றன என்பதால் இவ்வட்டச் சுழற்சியை உணர முடிகிறது. இச்சுழற்சியில் பொருள் திரிவு இடைவெளிகளும், காலக்கழிவு இடைவெளிகளும் சுழியத்தின் பொருளைப் புலப்படுத்துகின்றன. இந்தக்கால இடைவெளியைப் பாழ் எனப்பழந்தமிழர் குறிப்பிட்டனர். இச்செயல் பூஐயம் என வடநாட்டு மொழிகளில் திரிந்தது. சுழியம் என்னும் சொல் வடமொழியில் சூன்யம் எனத்திரிந்தது.
பரிபாடலில் “பாழ்” எனும் சொல்
தமிழறிஞர்களுள் மெய்யுணர்வாளர்களாகிய அறிவர் என்போர் வாநூல், கணிதம் ஆகியவற்றில் வல்லுநராகி உலகப் படைப்பின் நுணுக்கங்களையும் ஆராய்ந்தனர். ஐம்பூதங்களில் நிலம் நீரில் கரைகிறது. நீர் நெருப்பில் ஒடுங்குகிறது. நெருப்பு காற்றில் ஒடுங்குகிறது. காற்று வானத்தில் ஒடுங்கும். வானமும் ஒன்றுமில்லாமல் பாழ்நிலை எய்திக் கருந்துளைக்குள் போய்விடும். இதனை “விசும்புஇல் ஊழி” (பரிபா.2) என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.
ஓன்றென பாழென
ஒன்றுமற்ற இடைக்காலச் சுழிய நேரத்தைப் பாழ் என்னும் சொல்லால் குறித்திருப்பது இதன் கண்டு பிடிப்பாளர்கள் தமிழர்களே என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆரியர்களின் வேதத்தில் சுழியத்தைப்பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. தமிழர்களின் கணித நூல்களிலிருந்தே வடமொழியாளர் கணக்கறிவு பெற்றுள்ளனர். வடமொழியில் கணிதம், வானநூல், மருத்துவம், மெய்யியல், ஓகம், ஊழ்கம்(தியானம்) ஆகியவற்றை முதலில் மொழிபெயர்த்தோர் அனைவரும் பிற மொழியாளராகவே இருத்தல் அறிதற்பாலது.
தமிழர்களிடமிருந்தே 1,2,3,4,5,6,7,8,9,10 எனும் எண் வடிவங்களே அரேபியர் மற்றும் பொனீசிய வணிகர்களின் வாயிலாக உலக முழுவதும் பரவியுள்ளன என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
ஆகிங்கின் காலக்கோட்பாடும் காலச்சுழிக்கணக்கும்.
காலத்தின் வரலாறு Brief History of Time என்னும் தலைப்பில் விற்பனையில் முதலிடம் பெற்ற அரிய ஆய்வு நூல் எழுதிய அமெரிக்கப் பேரறிஞர் தீபன் ஆகிங் (Stephen Hawking) தன்னுடைய நூலில் ” Time starts with a big bang and mightend with big crench” எனக்குறிப்பிட்டுள்ளார்.
காலத்தின் தோற்றமே அண்டத்தின் தோற்றம். காலத்தின் முடிவே அண்டங்களின் முடிவு எனும் ஆகிங் கருத்து “தோற்றமே துடியதனில்” எனும் சிவனியக் கொண்முடிபை நினைவுபடுத்தும் போதே காலச் சுழற்சியின் மிகப்பெரிய இடைவெளி சுழிய வட்டத்தையும் நினைவுப்படுத்துகிறது.
கால இடைவெளி எனும் சுழியம் இல்லாதிருந்தால் ஒன்று எங்கே முடிகிறது. இரண்டு எங்கே தொடங்குகிறது என்பது தெரியாததால் 1,2,3 என எண்களைப் பிரித்தறியும் வரம்பு கிட்டாமல் போயிருக்கும்.
உலகின் கணிதக் கலை வளர்வதற்கு ஊன்று கோலான பழந்தமிழரின் சுழியக் கண்டுபிடிப்புக்கு உலகமே நன்றி செலுத்தக்கடமைப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு உரிமையாளரும் தமிழரே என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.
சுழியம் ஏன் தோன்றியது?
கடல்கொண்ட தென்னாட்டில் நடைபெற்ற தமிழ்க் கழகப்புலவர் பேரவை முத்தமிழ் இலக்கியப் பாங்குக்கு அடிப்படையான எண்ணும் எழுத்துமாகிய இலக்கணப் பாகுபாடு சிந்தனையைத் தூண்டி தருக்கம் எனும் ஏரண எதிராடல்கலையை வளர்த்தது. முதற்பொருள் கருப்பொருள் தொடபான உரையாடல்கள் ஐம்பூதங்கள் கலந்த மயக்கம் உலகம் என்றும் அதற்கு அடிப்படை அணுக்கொள்கை என்றும் முடிவு கண்டன: இதனைக்கண்ட அறிவர் இதற்குக் காட்சி அளவை (தர்சனம்) என்றனர்.
இந்த அளவையில் இன்மை என்பதும் ஒர் உள்பொருளாகக் கருதப்பட்டதால் இன்மையைக் குறிக்க சுழியம் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.
சுழியம் எங்குத் தோன்றியது?
சுழியம் தொடர்பான கருத்துகள் கடல் வணிகர்வழி பல நாடுகளுக்குப் பரவின. சுமேரிய பாபிலோனியரிடையிலும் பெரிய வட்டம் பத்தைக் குறித்தது. கி.மு.4000 அளவிலேயே இது அங்குப் பரவியிருப்பதால் கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் வாழ்ந்த கணியரும் அறிவருமாகிய வானநூல், கணித நூல் வல்லுநரிடை இது தோன்றியதாகும். சிந்து வெளி மக்களிடையிலும் 10:100 எனப்பதின்(தசம) மடங்கு எண்கள் தென்னாட்டுத் தமிழரிடமிருந்தே சென்றுள்ளன என்பதும் கருதத்தக்கது.
சுழியம் எப்படித் தோன்றியது?
எண்களை ஏறு வரிசையிலும் பெருக்கல் வரிசையிலும் கனம் எனும் அடுக்கு வரிசையிலும் 1/320 முதல் 1/320X320 எனும் முந்திரி, கீழ் முந்திரி வரிசையிலும் கணக்கிட்ட பந்தமிழர் நீட்டல் அளவையைப் பத்தின் அடிப்படையான பதின் (தசம்) அளவாகக் கொள்ளவில்லை. நீட்டல் அளவுக்குரிய கோலின் நீளத்தை 11 அடியாகக் கொண்டனர். இது வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடுவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட நீட்டல் அளவு. இதன் காற்பகுதியாகிய 2 ¾ அடி கோயில் கட்டும் கம்மியருக்கான தச்சு முழம் எனக்கூறப்படுகிறது.
வட்டத்தின் விட்டத்தை ஏழு சம கூறாக்கி அதனொடு 4 சமக்கூறுகளைச் சேர்த்து இரண்டால் பெருக்கினால் 7+4=11X2=22 சமக்கூறுகளாகிய வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இன்று படிப்பறிவில்லாத தச்சருக்கும் தெரிந்த தலைமுறைத் தொடர்பு அறாத கலையறிவு. 22/7 என்னும் கணக்கு நுட்பம் குமரிக்கண்டத்துத் தமிழரிடமிருந்தே உலக நாடுகளுக்கும் புரவியுள்ளது.
இரண்டாம் தமிழ்க் கழகம் தொடங்கிய பாண்டியன் வெண்தேர்ச்செழியன் தேருடையவன் என்பதால் சக்கரத்தின்சுற்றளவும் வட்டத்தின் பரப்பளவும் காணும் கணக்கு நுட்பம் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழருக்குத் தெரிந்திருந்தது என்பது புலனாகிறது.
எப்பொழுது தோன்றியது?
இடைக்காலச் சோழர் காலத்தில் 11 அடி அளவுகோலே வழக்கத்திலிருந்தது. சிந்து வெளியிலும் அரப்பா மொகஞ்சதாரோ நகரங்களில் உள்ள தெருக்களாக 22,33,44 அடி என்னும் அடி நீட்டல் அளவுடையனவாக இருந்தன. மதுரை போன்ற மூவேந்தர் தலைநகரத் தெருக்களின் அளவும் 11 அடியினஇ மடங்குகளாக 33,44 அடிகளாகவே உள்ளன. எனவே, சிந்துவெளி நாகரிகக் காலம் கி:மு. 3500 என்றதால் கி.மு. 4000 அளவிலேயே 11 அடி நீட்டல் அளவுகோல் தோன்றியிருக்க வேண்டும்.
எத்துணைப் பொüய நேர்க்கோடாக இருந்தாலும் அது மிகப்பெரிய வட்டத்தின் பரிதியில் சிறு நேர்க்கோடாக இருக்கும் என்பது கணித நூல் கண்டறிந்த உண்மை,5 ½ அடி உயரமுள்ள வண்டிச் சக்கரத்தின் சுற்றளவு 16 ½ அடி. ஒரு வண்டிச் சக்கரம் 320 சுற்றுச் சுற்றினால் அது சென்ற தொலைவு ஒரு கல் (மைல்) ஆகும் என்பதும், இது உலகம் முழுவதும் பரவியுள்ளதால் இதன் தொன்மையையும் கணித்தறியலாம்.
சுழியத்தை கண்டுபிடித்த தொல்கணியாதன்?
இன்மைக்கொள்கை தமிழருடையது. அணுக்கொள்கையில் ஏரணப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. இதனை
அண்மையின் இன்மையின் எண்மையின்
வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும்….. தொல். செய்யுள்214. எனத்தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வித்திலிருந்து மரம் உண்டாகிறது. வித்தினைப் பார்க்கும்பொது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியாகும்போது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியான பிறகு வித்தினைப் பார்க்க முடிவதில்லை.
வித்தில் மரம் தெரியாதது இன்னை. அதனால் மரம் இல்லை என்று பொரு கொள்ள முடியாது. இன்மையாகிய பொருள் உள்ள பொருளே. ஆதலால் சுழியத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படாத உண்மையாயிற்று. இதனைப் பக்குடுக்கை நன்கணியர், கணியாதன் ஆகிய கணியவியல் அறிவர்கள் உலகிற்கு உணர்த்தினர். நாளடைவில் ஆசிவகம் எனப்பட்ட இக்கோட்பாடு சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் எனும் பெயர்களில் நாலாத் திசையும் பரவிற்று.
பக்குடுக்கை நன்கணியார், கணியாதன் ஆகியோர்க்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கணியர் மரபில் தோன்றிய தொல்கணியாதன் என்பவரே முதன்முதல் இன்மைக் கோட்பாட்டினையும் சுழியத்தையும் வண்டிச்சக்கரத்தின் சுற்றளவு வாய்பாட்டையும் கண்டறிந்தவர் என்னும் செய்தியும் வள்ளுவக் கணியரின் செவிவழிச் செய்தியாக நிலவுகிறது.
சுழியம் எவ்வாறு பரவியது?
சாலைகளின் நீளம் காண 11 அடி கோலின் வழி வந்த காதத் தொலைவைக்குறிக்க, காதவழிக் கற்கள் தரைவழி வணிகர்களின் நலன் கருதி நடப்பட்டன. கடல்வழிப்பலணம் சொல்வோர்க்கு விண்மீன்களின் சுற்றுச்செலவுகளே எல்லை காட்டும் குறியீடுகளாயின.
புயல் வீசாத கடல் பாதையாகிய நில கடுக்கோட்டு இருமருங்கு 5 பாகை வழியாக ஈசுடர் தீவில் சிந்துவெளி முந்து எழுத்துக்களைப் பயன்படுத்தியோரும் அமெரிக்காவில் குடியேறிய இன்கா மாயர் பழங்குடிகளும் உயர்ந்த வானநூல் கணிதநூல் வல்லுநராகக் குடியோறியுள்ளனர்.
அணுக்கொள்கையின் உட்பிரிவாகிய இன்மைக்கொள்கை சுழியமாகக் கருதப்பட்டது. இது மெய்யியல் ஓகம், ஊழிகம் (தியானம்) மந்திரம் ஆகிய பழந்தமிழர் நான்மறைக்கொள்கைக்கு வித்தாயிற்று. அறம், பொருள், இன்பம், எனும் முப்பால் பகுப்பு இல்லற வாழ்க்கைக்கும் மெய்யியல் முதலாகிய நான்கும் துறஹக் கோட்பாட்டுக்கும் நிலைக்களங்களாயின.
பக்குடக்கை நன்கணியாரும் கணியாதனாரும் கண்டறிந்த சிறப்பியம் எனும் ஆசீவக அணுக்கொள்கையை வடநாட்டிலும் பரப்பியதால் மற்கலிகோசர் இதனை மேலும் விரித்துரைத்தார். வடபுலத்தார் சாங்கியம், யோகம், உலகாயதம் எனும் கோட்பாடுகளை வளர்த்துக்கொள்ளவும் புத்த, சமண சமயத்தார் அணுக்கொள்கையையும் இன்மைக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொள்ளவும் இது வழி வகுத்தது.
எண்கணிதம் இடையறவின்றிப் பல அடுக்கு எண்களாக வளர இன்மைக்கொள்கையின் புற வடிவமாகிய சுழியம் உதவியது. இதனால் தமிழில் பத்து இலட்சத்தைக் குறித்த நெய்தல், கோடியைக் குறித்த குவளை அதன் பன்னூறு மடங்கு அடுக்குகளைக் குறித்த ஆம்பல், தாமரை, வெள்ளம், ஊழி போன்ற பேரெண்கள் மிக எளிதாக உருவாயின.
சுழியத்தின் பயன்பாட்டால் வணிகம், வானநூல் கணிப்பு, கணிதக் கலையின் வளர்ச்சி கட்டடக் கலை, பொறியியல் ஆகிய பல்வகை அறிவியல் வளர்ச்சி விரைவுபட்டது.
உலக மக்கள் தமிழரின் சுழியம் கண்டுபிடிப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
Thursday, December 4, 2014
காடு
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
இயற்கை அறிந்து செயல்.
------------------------------------------------------------------------
கற்றவர்களுக்கும் கல்லாத காட்டுவாசிகளுக்கும். நடக்கும் ஒரு
விதமான இயற்கைப் போர்தான் இந்தக் காடு.
காட்டை நேசிக்கும் நாயகன் பெயர்
வேலு, காட்டை அழிக்கவும், தனது இனத்தைக்
காட்டிக் கொடுக்கவும் செய்யும் ”கூடாக் குணத்தானின்” பெயர் கருணா. இந்தப் பெயரைப் பாத்திரங்களுக்கு இட்டதாலே.
இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கத்திற்கு தமிழ் தேசியப் பேராளிகளின் சார்பாக வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்த் திரைப்படங்களின் இயல்புக்குறிய
காதல், நையாண்டிக் காட்சிகளைக் குறைத்து கொஞ்சம் பிசகி இருந்தாலும்.
பிரச்சார நெடி தவிர்க்க முடியாததாகியிருக்கும். அவ்வளவு ஆழமான
புரட்சிக்குறிய பல கருத்துக்களை ஆங்காங்கே தெளித்திருக்கிறார் இயக்குநர். காடு பற்றிய தமிழின் இலக்கியத்தில் வரும் வார்த்தைகளை அடுக்கியதிலிருந்து இயக்குநரின்
தமிழ் இலக்கியத்தின் மீதான பற்றையும் நமது பாரம்பரிய காட்டின் மீதான அறிவையும் வாழ்வியலோடு
இணைத்துக்கொண்டவராக தெரிகிறார். பல்லுயிர்க் காடுகளில்
8ல் இரண்டு நம் நாட்டில் இருக்கிறது என ”புலிகள்”
பற்றி சொல்லும் இடத்தில் ஒரு இரட்டை அர்த்த வசனம் மேலிடுகிறது.
பொதுவாக தமிழ் திரைப் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் என்றாலே அது
பாலியல் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த
வசனம் வரலாறுத் தொடர்புடையதாக இருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். மேலும்
”எட்டுத்திக்கும் எங்கள் பக்கம்” பாடல் தமிழ் இளைஞர்கள்
தங்களின் கைபேசி அழைப்பொலியாக மாற்றிக் கொள்ள தகுதி வாய்ந்த வரிகளாக இருக்கிறது. படத்தின்
சில குறியீட்டுக் காட்சிகளான சிலவற்றில் ஒரு அரசியல் தன்மை மறைபொருளாக இருக்கிறது.
குறிப்பாக நந்தா பாத்திரம் அதட்டியவுடன்
கீழே விழும் அதிகாரச் சின்னமான லத்தி, நந்தா நாயகன் வேலுவுக்கு கொடுக்கும் ஆடை, கூத்தாடிக் கலைஞர்
பேன்றவைகள்.
அரசியல்வாதிகளை விட அர”சதி”காரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை மிக நுட்பமாக
சொல்லிச் செல்கிறார் ஸ்டாலின். புழுக் கத்திரிக்காயில் ஒரு உலக
அரசியலை புரியவைக்க முயற்சித்திருக்கிறார். உரிமைக்காக எதையும்
இழக்கலாம் என்பது நம் கண் முன் நடந்த, கடந்த கால வரலற்றையும்
நினைவுபடுத்துகிறார். புரட்சியாளர்கள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை
மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். கூடவே அதிகார வர்க்கம் நயவஞ்சகமாகப் பேசி
காரியத்தைச் சாதிக்கும் என்பதையும் தோலுரிக்கின்றார். காடு, விஞ்ஞானி பேன்ற படங்களில் நமது பாரம்பரியம் பற்றியும் நாம் இழந்து தவிக்கும்
அறிவு, வளங்கள் பற்றியும் அடுத்தடுத்து காணக்கிடைக்கிறது.
இந்த தமிழ்த் திரைக் கலைஞர்கள் தமிழ்ப் பற்றுடனும், இந்த பாரம்பரிய வேர்களில் இருந்தும் வந்தவர்களாகத் தெரிகிறார்கள். இவர்கள்
எதிர் வரும் காலத்தில் தமிழ் தேசிய கருத்துக்களையும் கலை, பண்பாடு,அரசியல் முதலியவற்றையும் மீட்க முடியும் என்ற நம்பிக்கை கீற்றை ஏற்படுத்துகின்றனர்.
Wednesday, December 3, 2014
விளாம் பழம்!!
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
(குப்லாய் கான்)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.
ஆமைகளின் கடல் வழியில் கடலோடும் தமிழரின் கடல் மேலாண்மை!!
தமிழர்களின் தொன்மையை பற்றி ஆய்வு செய்து வரும் என்னை வியக்க வைப்பது உலக நாடுகளில் உள்ள தொன்னூருக்கும் மேற்பட்ட மொழிகளில் திராவிட என்று சொல்லபட்ட தமிழ் மொழியின் கூறுகள் அதன் பண்பாடுகள் நிறையவே இருப்பதும் இந்தோ ஐரோப்பிய கடற்கரை மொழிகள் அனைத்திலும் தமிழ் மொழியின் கூறுகள் அதன் பண்பாடுகளின் தாக்கங்கள் பிணைந்து நிற்பதும்
உலகம் முழுவதும் உள்ள அணைத்து கண்டங்களிலும் தமிழ் பரவல் இருப்பதும் அதை ஒப்பிட்டிவியல் மொழி வழியாக அனைவரும் பேசி வரும் இக் காலத்தில்
அதற்கான தமிழியல் தரவுகளை கடலியல் மூலமாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நான்
ஒரிசாவில் இருபது வருடம் வாழ்ந்து தமிழ் சங்க பணிகள் செய்து
அங்கு உள்ள உள்ள தமிழர்களை ஒன்று சேர்த்து அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து ,கலிங்க ஈழ தமிழ் உறவுகளை பற்றி ஆய்வு செய்து அதன் பின்னால் குமரி கடல் ஆய்வுகள் செய்து உலகின் மேற்கு பகுதிகளையும் ,கிழக்கு பகுதிகளையும் கடல் மூலமாக இணைத்தவர்கள் அகண்ட தென் தமிழக கடலோடிகள் என்று நிருபிக்கும் நேரத்தில்
கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம்.
ஒரிசாவில் இருபது வருடம் வாழ்ந்தவன் நான்
லெமுரிய ,குமரிக்கண்டம்,கடல் கொண்ட தென்னாடு என்று மூழ்கிய நிலங்களை ,கடலில் இருக்கும் நமது பண்டைய துறைமுகங்களை பற்றி பல வருடங்களாய் ஆய்வு செய்து வரும் எனக்கு என் ஆய்வுகளில் ஒரு பகுதியான இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு வியப்பான நிகழ்வு தெரிய வந்தது
உலகில் கடல் ஆமைகள் பல கோடி வருடங்களாய் வாழ்ந்து வருகின்றது
மனிதர்களின் காலமோ நான்காம் பனி காலத்திற்கு பிந்தைய சில இலக்க வருடங்கள் தான்
உலகத்தில் முந்நூறு வகையான ஆமைகள் இருந்தாலும் இன்று ஆய்வாளர்கள் ஆமைகளை எழு வகையாக பிரித்து வைத்து இருகிறார்கள்
கால்கள் இருந்தால் அதற்க்கு tortoise எனவும் ,இறக்கைகள் இருந்தால் அதற்க்கு marine turtles என்று பெயரும் வைத்து உள்ளார்கள்
நமது கடலில் பங்குனி ஆமை ,அழுந்காமை,பச்சை ஆமை,கிளிமூக்கு ஆமை, தோணி ஆமை என்ற ஐந்து வகை ஆமைகள் வருகின்றன ,
அருமையான தட்ப வெப்ப சூழல் இருப்பதால் இனபெருக்கம் செய்ய கல் புற்களும் அதற்க்கு தேவையான ஜெல்லி இன மீன்களும் கிடைபதால்
சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் கிலோமீட்டர்கள் இந்தோ பசிபிக் கடல் நீரோட்டங்களில்
அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயற்கைக்கோள் சாதனம்)RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் நிகழ்வுகள் தெரிய வந்தது
ஒரிசாவில் வாழ்ந்ததால் பல வருடங்கள் கஹிர்மாதா தேவி பட்டினம் ,ருஷிகல்யா போன்ற பகுதிகளில் வரும் ஆமைகளை காண பல முறை சென்று இருக்கிறேன் ,அதன் அருகில் தான் தென்கிழக்கு ஆசியாவுடன் தொடர்பு கொண்ட பாலூர்,தேவிபட்டினம்,தாமர போன்ற பண்டைய துறைமுகங்களும் இருந்தன ,தான் முட்டை இடும் இடத்தை தேடி வரும் ஆமைகள் , ஆமைகளின் குட்டிகள் கூட தான் பிறந்த இடத்தை தேடி மீண்டும் இனபெருக்கம் செய்ய வருவது ஆமைகளின் சிறப்பு
. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன.
அப்படி அவை கடந்த கடற்கரைகளை பன்முக பறவையில் ஆராய்ந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து.
ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் இன்று உள்ள துறைமுகங்களும் அவற்றில் 1300 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
மியான்மர் -தமிழா காஞ்சி -
மலேசியா- சபா சந்தோகன்
ஆஸ்திரேலியா- கூலன்,மண்ணின் கிரீட தமிழி கிரீக் , சோழவன், ஊரு,
நியூசீலாந்து - வான்கரை, ஓட்டன்கரை, குமரா-
ஸ்பெயின்- மலகா கடலன் ,கடலோட்டி ,படகோட்டி ,படகோனிய
ஜப்பான் - நாரை,மருதை,செண்டை ,
பப்புவா நியூ குனியா - நான்மாடல், குமரி,பொன் பீ ,குறள்
மெக்சிகோ -திகள் ,சோழா, சேதுமால் ,சோழ ,தமிழி பாஸ்
ஐஸ்லாந்து- திங் வெளிர்-
இந்தோனேசியா - தென்கரை ,களிமாந்தன் ,மதுரை
ஆப்ரிக்கா -சன்சிபார் ,நாகமணி கோமுட்டி
துருக்கி -கடல் யோக,அதியமான் ,களமர் ,கலமர்
ஈரான் - கலமர், களமர் பழனி
பெரு - கலவோ ,பள்ளர்,மல்லர் சிலகா ,காஞ்சி
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.
இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை.
நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!
அதே போல்
பள்ளர் பீன்ஸ் என்று வழங்கப்படும் மொசைகொட்டையும் கடல் பயணத்தில் உணவிற்கு உதவும்
பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.பாய் மாற துணியின் பெயர் வடம்
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு தமொவோ என்ற பழங்குடியினர் குடியிருப்பில் வாங்கரி என்ற இடத்தில தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வெண்கல மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பல கடற்கரைகளில் தமிழ் பெயர் உள்ளது
இப்படி கடல் சார் பயண தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த போது
பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் உள்ள தரவுகள் வந்த படியே உள்ளது
உலகின் பல துறைமுகங்கள் ஆமைகள் இனபெருக்கம் செய்யும் ஆற்றங்கரை பகுதிகளில் தான் அமைந்து உள்ளது
உலகின் வெப்பத்தை நாம் உணரமால் இருக்க வைக்கும் கடலின் மிக பெரிய மற்றும் சிறிய நீரோட்டங்களை தனது வழி தடமாய் வைத்து இருக்கும் ஆமைகளின் திறனை உணர்ந்த நமது கடலோடிகள் அந்த வழிகளை பாய் மரம் இல்லாத முகவை, மிதப்பு தெப்ப காலத்திலே கண்டுபிடித்து ,
பின்னர் தனது அறிவு சார் திறமையால் பருத்தியால் வெய்த பாய் மர துணியை பயன்படுத்தி பாய் மர கப்பல்களை இயக்கியதால் தான் உலக நாடுகளில் பல்லா என்ற பாய் மர துணி புழக்கத்தில் வந்து நம் பாய் மர துணியை மத்திய திரை கடல் பகுதியினர் பருத்தியின் பெருமையை உணர்ந்து தமிழகம் வர தொடங்கினர்
இன்றும் பாய் மாற துணிகளை பருத்தியால் செய்த மாதரியார் வாதிரியார் என்ற நெசவு சமுகம் நம் தென் தமிழக பாண்டிய நாட்டில் உள்ளது
இப்பொழுது நன்கு ஆராய்ந்து பார்த்தால் உலகின் முதல் கடலோடிகள் என்ற பெருமையை தமிழ் மொழியை பேசும் கடல் சூழந்த நம் நில மக்கள் தான் பெறுகிறார்கள்
இன்றும் உலகில் கடல் சார் மேலாண்மையின் சிறப்பை
மேலை நாட்டையும் கீழை நாட்டையும் அந்த காலத்திலேயே அறிந்து இருந்த நம் தமிழ் மக்கள் தமக்குள் தக்க வைத்து உள்ளார்கள்
ஆமைகள் என்று என்று சொன்னாலே
தமிழர்களின் நினைவிற்கு உடன் வருவது
"ஆமைகள் புகுந்த வீடும் அமீனா புகந்த வீடும் உருபடாது '
என்ற வழக்கு சொற்கள் தான்
கடல் கடந்த ஆமைகளை பின் தொடர்ந்த கடலோடும் மீனவ தமிழர்கள தன வீட்டை விட்டு கடலில் தொலை தூர நிலத்திற்கு சென்றதால் அந்த பெண்களின் சாபத்திற்கு ஆமைகள் உள்ளானதும்
கடல் விரும்பாத பனி நில மக்கள் கடலுக்கு செல்ல கூடாது என்ற சட்டம் போட்டதால் அதன் தொடர்ச்சியாக ஆமைகள் வெறுக்கும் நிலையை உருவாக்கி இருக்கலாம்
அல்லது சனி கிரகம் என்ற பெயர்க்கு மெதுவாக செல்வது என்ற வட மொழி பொருள் இருந்ததால் ,நம் வழக்கில் சனிக்கிரகத்திற்கு ஆமை என்ற பெயர ஏற்கனவே இருந்ததால் சனி புகுந்த வீடு உருபடாது என்ற பொருளுக்கு ஆமைகள் புகுந்த வீடு உருபடாது என்றும் வந்து இருக்கலாம்
ஆனால் தமிழர்களின் வாழ்வில் ஆமைகள் பல வடிவில் உள்ளது , சில பெண்களின் கழுத்தில் ஆமை தாலியாகவும் , நேர்த்திக்கு வேண்டும் போது ஆமைகள் வடிவத்தையும் ,பல கோயில்களில் ஆமைகள் சிற்பத்தையும் ,வைணவ மக்கள் கூர்மம் என வணங்குவதையும் ,மீனவர்கள் ஆல்லேய்லோ ஆமை எல்லாம் , குட்டி ஆண்டவர் என வணங்குவதையும் என் ஆய்வில் உலக நாடு கடற்கரை மக்கள் ஆமைகள் என்றால் செல்வம் என்று சொல்வது போல் நாமும் ஆமைகளை இனி மதிக்கலாம்
நமது சென்னை திருவான்மியூரில் இருந்து அடையாறு என்கின்ற கழிமுக பகுதிகளின் பழைய பெயரே ஆமையூர் என்று ஆம்பூர் நடுகல்லில்
"படுவூர் கோட்டத்து மேல் அடையாறு நாட்டு ஆமையூர் "
என்பதையும் கூட நாம் நினைவில் கொள்ளலாம்
அகண்டதமிழகத்தின் கடற்கரை முழவதும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் ஆமைகளின் தாக்கங்கள் இருந்ததை நாம் நன்கு உணர முடியும்
ஆமைகள் வழியை தொடர்ந்து , நமது பாண்டியர் , தொல் பழங் குடிகளின் வரலாற்று ஆய்வையும் ஒருங்கிணைத்து செய்தால் தமிழர்கள் உலகில் எங்கு எங்கு சென்றார்கள் என்பது பற்றி நமக்கு மேலும் தெரிய வரும்
இன்று உலகில் முதல் மனிதர்கள் வாழ்ந்து இருக்ககூடும் என்று சொல்ல கூடிய முதல் ஆறு இடங்களில் மெட்ராஸ் கற்கால தொழிற்சாலை என்று வழங்கப்பட்ட வட தமிழகமும் வருகின்றது
எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் சில நண்பர்களின் துணைகொண்டு மட்டுமே இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த நான் இப்போது தான்
INTEGRATED "OCEAN CULTURE" RESEARCH FOUNDATION
ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாடு நிறுவனம் ஒரு கடல் சார் நிறுவனம் ஒன்றை நிறுவி ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறேன்
இதன் மூலம் தமது தமிழகம் இந்திய உலக கடற்கரைகளின் கடல் சார் வரலாறு பற்றி நாம் நன்கு அறியலாம் ,
நமது கடல் மேலாண்மையை பற்றி நாம் உலகறிய வைக்கலாம்
இந்த ஆய்வின் மூலம் மூலம் கடல் சார் அறிவு புவி சுழற்சி ,கப்பல்துறை முக ,கடல் வளம், கடல் சுற்று சூழல், பருவ காற்றுகள் பற்றிய ஆய்வுகள் , ,மீனவர்கள், மற்றும் பல துறைனரிடம் ஒருங்கிணைந்து பணிகள் செய்யலாம்
தமிழ் மணி
தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.
இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.
இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது
இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.
இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது
Subscribe to:
Posts (Atom)






